

சிட்னி,
கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. அங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் 7 வாரங்களாக கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள போதும் அங்கு வைரஸ் பரவலின் வேகம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் சிட்னியில் 466 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் 10 கி.மீ. தொலைவு வரை நடமாட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 5 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதமாக 5,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 73 ஆயிரம்) வரை வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.