

மெல்போர்ன்
பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமருடன் வர்த்தகம், மாணவர்கள் விசா தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செல்கிறார். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அவரை வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முன்னெப்போதையும் விட இப்போதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளியாகும். இருநாடுகளும் இணைந்து செயல்படுவது பெரும் நன்மைகளை வழங்கி வருகிறது என தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிசுடன் வர்த்தகம், பாதுகாப்பில் ஒத்துழைப்பு மற்றும் இந்திய மாணவர்களுக்கான விசா வரம்புகள் மற்றும் அவற்றை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பாதிப்புகள் உள்ளிட்ட விசயங்கள் பற்றி அவர் பேச இருக்கிறார்.
இதேபோன்று, அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் இருதரப்பு உறவுகளில் முக்கிய பங்காற்றி உள்ளனர். அதற்கான கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.