

குவெட்டா
பாகிஸ்தானின் ஆளுமைக்கு உட்பட்ட பலூசிஸ்தானில் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. எனினும், அந்த மாகாணத்திற்கு பெரிய கவனம் எதுவும் செலுத்தப்படாத சூழல் உள்ளது. ஆனால், அந்த வளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி கொண்டு விட்டு, மக்களை அலட்சியம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனால், சுதந்திரம் கோரி பலூச் மக்கள் போராடி வருகின்றனர்.
இதில், பலூச் மக்களில் சிலர் பாகிஸ்தான் படையினருக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பலூச் இளைஞர்கள் சமீப காலங்களில் திடீர், திடீரென காணாமல் போகின்றனர். அவர்கள் சில நாட்களில் படுகொலை செய்யப்பட்டும், சிலரின் உடல்கள் கிடைக்காமலும் போயுள்ளன.
இந்த நிலையில், மனித உரிமை அமைப்பான பாங்க் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது. மாத அறிக்கையின் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத அறிக்கையில், பலூசிஸ்தான் முழுவதும் மற்றும் அண்டை நகர பகுதிகளிலும், தொடர்ச்சியாக தீவிர விதிமீறல்கள் நடந்துள்ளன. பலர் திடீரென காணாமல் போவதும், நீதித்துறைக்கு உட்படாத படுகொலைகள், சித்ரவதைகள் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
இதில், பலூசிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில், பிப்ரவரியில் 109 பேர் காணாமல் போயுள்ளனர். தவிர கராச்சி, தேரா காஜி கான் நகரங்களிலும் சம்பவங்கள் நடந்துள்ளன. குவெட்டா, நுஷ்கி, ஹப், குவாடர், பஞ்ச்குர் மற்றும் கெச் மாவட்டங்களில் பலர் காணாமல் போயுள்ளனர். சட்டவிரோத வகையில் பிடித்து வைக்கப்பட்டும் உள்ளனர்.
இதன்படி 41 தனிநபர்கள் சிறை பிடிக்கப்பட்டு, பின்பு விடுவிக்கப்பட்டனர். ஆனால், காவலில் இருந்தபோது, மனம் மற்றும் உடல்ரீதியாக சித்ரவதை நடந்துள்ளது என அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.
பிப்ரவரியில் 50 பேர் நீதித்துறைக்கு உட்படாத வகையில், படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். எந்தவித சட்ட நடைமுறையும் இன்றி இந்த கொடூர செயல்களில் பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த மாதத்திலும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்பான அறிக்கை வெளியானது. பலூசிஸ்தானில் 2011-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற மனித உரிமை விதிமீறல்கள் நடக்கின்றன என பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் சுட்டி காட்டியுள்ளது. இதற்கு பின்புலத்தில் ஐ.எஸ்.ஐ. மற்றும் பிரன்டியர் கார்ப்ஸ் போன்றவை உள்ளன என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளது.