அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை; பாகிஸ்தானில் அதிரடி

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உத்தரவின்கீழ், அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்து உள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை; பாகிஸ்தானில் அதிரடி
Published on

கராச்சி,

பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த பிப்ரவரி 8-ந்தேதி அந்நாட்டில் பொது தேர்தல் நடந்து முடிந்தது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில், நீண்ட இழுபறிக்கு பின்னர் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.

அவருடைய தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ந்தேதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கூட்டம் நடந்தது. இதில், வெளிநாடுகளிடம் பாகிஸ்தான் கடன் பெறும் சவாலான சூழல் அதிகரித்த நிலையில், அதுபற்றி குறிப்பிட்டு பிரதமர் ஷெரீப் பேசும்போது, நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என்று வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன் என்றார்.

நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும் என்றும் பேசினார். இந்த கூட்டத்தில், வசதி படைத்தோருக்கான மானிய நிறுத்தம், மொத்த விற்பனையாளர்களை வரி விதிப்புக்குள் கொண்டு வருவது பற்றியும் பேசப்பட்டது.

கூட்டத்தின்போது, நாங்கள், சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம் என்றும் வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என்றும் அப்போது அவர் கூறினார்.

இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது, இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும்.

பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்து உள்ளது. எனினும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது, சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிக்கன நடவடிக்கையால், பணம் சேமிக்கப்படுவதுடன், பொதுமக்களின் நிதி பொறுப்புடன் செலவிடப்படுவதற்கான நோக்கம் செயல்படுத்தப்படும்.

பாகிஸ்தானின் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் மற்றும் மந்திரி சபை உறுப்பினர்கள் தங்களுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விருப்பத்துடன் விட்டு கொடுப்பது என கடந்த வாரம், முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், தன்னுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விட்டு கொடுப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com