வங்காளதேசம்: 2026-ம் ஆண்டு ஏப்ரலில் பொது தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
டாக்கா,
வங்காளதேசத்தில் பிரதமராக பதவி வகித்தவர் ஷேக் ஹசீனா. இவருடைய தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பற்றிய விவகாரம், வன்முறையாக வெடித்தது. இது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால், பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன்பின்னர், வங்காளதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார். ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என அவர் கூறி வருகிறார்.
வங்காளதேசத்தில் நிலையான அரசு இல்லாத சூழலில், அந்நாட்டுக்கான பொது தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் இடைக்கால அரசு இன்று அறிவித்து உள்ளது.
இதன்படி, முகமது யூனுஸ் இன்று தொலைக்காட்சி வழியே நாட்டுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை இன்று அறிவிக்கிறேன். தேசிய அளவிலான தேர்தல் 2026-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் பாதியில் நடைபெறும்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் விரிவாக உங்களுக்கு வழங்கும் என்று பேசியுள்ளார்.






