

டாக்கா,
வங்காள தேசத்தில் 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
தற்போது தனது நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்ட வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது மூத்த கட்சியினருடன் நாடு திரும்பி அந்நாட்டில் உள்ள கோர்ட்டில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள தனது கட்சியான அவாமி லீக்கின் உறுப்பினர்களுடன் தானும், விருப்பத்துடன் நாட்டிற்குத் திரும்பி கோர்ட்டில் ஆஜராகத் திட்டமிட்டு உள்ளார். மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் மீது கொடூரமான அடக்கு முறையை நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, கடந்த நவம்பரில் கோர்ட்டில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த ஹசீனா, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
இதற்கிடையே, வங்கதேச நிதி புலனாய்வு அமைப்பின் ஆண்டு அறிக்கை வெளியீட்டு விழா தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைப்பின் தலைவர் இக்தியார் உதின் முகமது மாமுன், 'நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், ஷேக் ஹசீனா, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 10 பெருநிறுவனங்களுக்கு சொந்தமான, 59,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன' என, குறிப்பிட்டார். வங்கதேசத்திற்குள் இருக்கும் 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், வெளிநாடுகளில் உள்ள 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.