

டாக்கா,
பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, விடுதலை பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீது அழைப்பு விடுத்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று வங்காளதேசத்துக்கு சென்றார்.
தனி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் டாக்கா சர்வதேச விமான நிலையம் சென்ற ஜனாதிபதிக்கு, அங்கு 21 குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காளதேச ராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள் விமான நிலையத்திலேயே ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
நேற்று மாலை, வங்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். அவரை பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவு மந்திரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்நிலையில் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வங்காளதேச விடுதலை பொன்விழா நடக்கிறது. அதில், ஜனாதிபதி ராம்நாத் கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். தேசிய அணிவகுப்பு மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது.
பிற்பகலில், மாபெரும் வெற்றி நாயகர்கள் என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடக்கிறது. அதில், வங்களாதேச தந்தைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. ராம்நாத் கோவிந்துடன் அதிபர் அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
3-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) டாக்காவில் ராம்னா பகுதியில் புதுப்பிக்கப்பட்ட காளி கோவிலை ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். அதே நாள் அவர் டெல்லி திரும்புகிறார்.