கலவர பூமியான வங்காளதேசம்: ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்புவாரா..? அவரது மகன் வெளியிட்ட தகவல்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதும், ஆட்சியை வங்காளதேச ராணுவம் கையில் எடுத்துக்கொண்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், ஆட்சியை வங்காளதேச ராணுவம் கையில் எடுத்துக்கொண்டது. அதன்படி நாடு முழுவதும் இயல்பு நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதை ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

இதனிடையே வங்காளதேச தேசிய கட்சி செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கான பொறுப்பை ராணுவம் ஏற்கும் என தெரிவித்தார்.

இந்தசூழலில் ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அங்கு தனது மகளை சந்தித்த பின் ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, அரசியலுக்கு இனி மீண்டும் திரும்பமாட்டார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'வங்காளதேசத்தில் போராட்டம் வெடித்ததால் 4-ம் தேதியில் இருந்தே பதவி விலகுவது குறித்து ஷேக் ஹசீனா பரிசீலித்து வந்தார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது வங்காளதேசம் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் இன்று ஆசியாவில் எழுச்சி பெறும் புலிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்காக கடினமாக உழைத்த தனக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் எழுந்ததால் அவர் ஏமாற்றத்தில் உள்ளார். இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்பமாட்டார்" என்று ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறினார்.

எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அதிகப்படியான குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்த ஜாய், சட்ட அமலாக்கத்தால் எதிர்கொள்ளும் வன்முறையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் பதில் நியாயமானது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com