வங்காளதேச வன்முறை: ஐ.நா. கவலை

வங்காளதேச வன்முறை தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கவலை தெரிவித்தார்.
நியூயார்க்,
வங்காளதேசத்தில் கடந்த வாரம் மாணவர் போராட்ட தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். துணி ஆலையில் வேலை பார்த்து வந்த தீபு சந்திரதாஸ் என்ற இந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வங்காளதேசத்தில் இந்து இளைஞர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கருத்து பற்றி அவரது செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
வங்காளதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வங்காளதேசமோ, வேறு நாடோ பெரும்பான்மையை சேராதவர்கள் தங்களை பாதுகாப்பாக உணர வேண்டும். ஒவ்வொரு வங்காளதேசத்தவரும் தங்களை பாதுகாப்பாக உணர தேவையான நடவடிக்கைகளை வங்காளதேச அரசு எடுக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மாணவர் போராட்ட தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலையால் அதிர்ச்சி அடைந்ததாக ஐ.நா. மனித உரிமை தலைவர் வோல்கர் துர்க் கூறியுள்ளார்.






