

லண்டன்,
இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் காரணமாக, அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் மல்லையா மீது திவால் நடவடிக்கை எடுக்குமாறு லண்டன் ஐகோர்ட்டின் திவால் வழக்குகள் அமர்வில் 13 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பு வழக்கு நடத்தி வருகிறது. நேற்று முன்தினம், நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்கிகள் சார்பில் ஆஜரான வக்கீல் மார்சியா சேகர்டெமியன் வாதிட்டதாவது:-
விஜய் மல்லையா தரப்பு காரணமின்றி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அவரது மதுபான நிறுவன சொத்துகள், அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அந்த சொத்துகள் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதாக அவர் கூறுவதை ஏற்க முடியாது. மல்லையா மீது திவால் நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.