உலகின் புதிய குடியரசு நாடாக மாறிய பார்படாஸ்.. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி!

பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் அதிகார மையத்தின் தலைமை பொறுப்பு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சுய அதிகாரம் பெற்ற தனி குடியரசு நாடாக மாறி உள்ளது பார்படாஸ் தீவு.
உலகின் புதிய குடியரசு நாடாக மாறிய பார்படாஸ்.. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி!
Published on

பிரிட்ஜ்டவுன்,

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் அதிகார மையத்தின் தலைமை பொறுப்பு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சுய அதிகாரம் பெற்ற தனி குடியரசு நாடாக மாறி உள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணியை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது.

பார்படாஸ் தீவின் தலைநகரமான பிரிட்ஜ்டவுனில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற விழாவில் 72 வயதான டேம் சாண்ட்ரா மேசன் புதிய அதிபராக பொறுப்பேற்று கொண்டார். அவர் 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஆளுநராக இருந்தவர். அங்குள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரை புதிய பெண் அதிபராக தேர்வு செய்தனர். அவர் ராணி எலிசபெத் பதவி வகித்த இடத்தில் அவருக்கு மாற்றாக பொறுப்பேற்றுள்ளார். பார்படாஸ் நாடு பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து சுய அதிகாரம் பெற்ற நாடாக மாற கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அது தற்போது நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டின் பிரதமராக செயல்பட்டு வந்த மியா மட்லே புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் முன், மீண்டும் முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.

பிரபல பாப் இசை பாடகி ரிஹானா, பார்படாஸ் நாட்டின் தேசிய நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

பிரபல கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்டு சோபெர்ஸ் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பார்படாஸ் தீவானது, கரீபியன் தீவுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட வளமையான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

அந்நாடு சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகள் ஆன தினத்தை கொண்டாடும் விழாவோடு சேர்த்து அரசாட்சியை துறந்து சுய அதிகாரம் பெற்ற குடியரசு நாடாக மாறிய விழாவும் நடைபெற்றது.

பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கரீபியன் தீவான பார்படாஸில், கடைசியாக ஒருமுறை பிரிட்டன் அரசாட்சிக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு இங்கிலாந்து அரச கொடி கீழே இறக்கப்பட்டது.

இவ்விழாவில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டு இது புதியதொரு தொடக்கம் என்று சிறப்புரை ஆற்றினார்.

குடியரசாக மாறியுள்ள பார்படாஸ் தீவுக்கு இங்கிலாந்து ராணியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துரையில், இனி வரும் காலங்களில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் இருக்குமாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com