

பீஜிங்,
சீனா மற்றும் இங்கிலாந்து இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகிறது. இதற்கு ஹாங்காங் விவகாரம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தநிலையில் சீன அரசுக்கு சொந்தமான சீனா குளோபல் டெலிவிஷன் செய்தி சேனலை இங்கிலாந்தில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை இங்கிலாந்தின் ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ஆப்காம் கடந்த வாரம் ரத்து செய்தது.
இங்கிலாந்தின் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதால் சீன அரசு தொலைக்காட்சியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக ஆப்காம் தெரிவித்தது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி தரும் விதமாக இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்தி சேனல் ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சீன ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிபிசி உலக செய்தி சேனல் சீனா தொடர்பான தனது அறிக்கைகளில் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் நிர்வாகம் ஆகியவற்றின் விதிமுறைகளை கடுமையாக மீறியதாக கண்டறியப்பட்டது. மேலும் சீனாவின் ஒற்றுமைக்கும் தேசிய நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிபிசி உலக செய்தி சேனல் செய்திகளை வெளியிட்டுள்ளது. எனவே ஒரு வெளிநாட்டு சேனலாக சீனாவில் ஒளிபரப்பப்படுவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய தவறியதால் பிபிசி உலகச் செய்தி சேனல் இனி சீன எல்லைக்குள் தனது சேவையை தொடர அனுமதிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பிபிசி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.