சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

பீஜிங்,

சீனாவின் மத்திய நகரமான உகானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுகள் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இரண்டாவது அம்சம் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த நிலையில் சீன தலைநகரான பீஜிங்கில் இனி வீட்டை விட்டு வெளியே பொதுவெளியில் செல்வோர் முக கவசம் அணியத்தேவையில்லை. அவர்கள் சுதந்திர காற்றை சுகமாக இனி அனுபவிக்கலாம். இதற்கான அறிவிப்பை பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இதை அரசு நாளேடு நேற்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் கூறும்போது, பொதுமக்கள் இனி முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்க வேண்டும். அதாவது தனிமனித இடைவெளியை தொடரவேண்டும் என தெரிவித்தது. இதனால் வானிலை நன்றாக இருக்கிறபோது பொதுமக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

இது வாழ்க்கைத்தரத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒத்திபோடப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் 22-ந் தேதி திட்டமிட்டபடி தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிற வேளையில் இந்த முக கவச தவிர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக 21-ந் தேதி சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு பீஜிங்கில் நடக்க உள்ளது. இந்த கூட்டங்களில் 5 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டங்களில் வரவு செலவுத்திட்டம் (பட்ஜெட்) உள்ளிட்ட ஆண்டுக்கான செயல்திட்டங்கள் வெளியிடப்படும்.

இதற்கிடையே சீனாவில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது. அவர்களில் 12 பேருக்கு அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என சீன தேசிய சுகாதார கமிஷன் கூறி உள்ளது. மேலும் இந்த வைரஸ் தோன்றிய உகான் நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 947 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 227 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 4,634 ஆகவும் இருந்தது. தலைநகர் பீஜிங்கில் இந்த நோய் தோற்றில் இருந்து 570-க்கும் மேற்பட்டோர் மீண்டு வந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com