

லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, சீனாவின் செல்போன் செயலிகள் பல இந்தியாவில் தடை செய்யப்பட்டன. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுவரை 224 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது சீன நிறுவனங்களின் நலன்களை பாதித்துள்ளதாக சீனா கவலை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் காவோ பெங் கூறுகையில், சீன நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான சேவைகள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
எனினும் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை நேர்மறையாக பராமரிக்க இந்தியா தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த காவோ பெங், கடந்த 2021-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 43 சதவீதம் அதிகரித்து இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.