ஹசீனா அமைதியாக இருப்பது நல்லது : இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்

வங்காளதேச மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
ஹசீனா அமைதியாக இருப்பது நல்லது : இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதற்கு எதிராக கடந்த ஜூலையில் தொடங்கிய மக்கள் போராட்டம் பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது.

இந்த சூழலில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து அரசியல் கருத்துகளை சேக் ஹசீனா கூறுவது நட்புறவை பாதிக்கும் செயல் என்று வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக யூனுஸ், டாக்காவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வங்காளதேசம் இந்தியாவுடன் வலுவான உறவுகளை மதிக்கிறது. ஹசீனாவின் நிலைப்பாட்டில் யாரும் திருப்தி இல்லை, ஏனென்றால் அவர் பேசுவது பிரச்சனையாக இருக்கிறது. அவர் அமைதியாக இருந்திருந்தால், நாங்கள் மறந்திருப்போம்; மக்களும் மறந்து இருப்பார்கள். ஆனால் அவர் இந்தியாவில் அமர்ந்து கொண்டு பேசுகிறார், இது யாருக்கும் பிடிக்கவில்லை.

இது எங்களுக்கும் இந்தியாவுக்கும் நல்லதல்ல. இது அசவுகரியமாக உள்ளது. மக்கள் எழுச்சி மற்றும் மக்களின் கோபத்தைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார். அட்டூழியங்களுக்கு எதிராக வங்காளதேச மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதற்காக அவர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்.

அவரை திரும்ப அழைத்து வர வேண்டும், இல்லையெனில் வங்காளதேச மக்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். அவர் செய்த அட்டூழியங்கள், இங்குள்ள அனைவர் முன்னிலையிலும் விசாரிக்கப்பட வேண்டும். இந்தியாவுடன் நல்லுறவுவையே வங்காளதேசம் விரும்புகிறது. ஆனால் ஹசீனாவின் தலைமை மட்டுமே நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது என்ற கதையை இந்தியா கைவிட வேண்டும் . வங்காளதேசம் மற்ற தேசங்களைப் போலவே மற்றொரு அண்டை நாடு. இந்திய-வங்காள உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com