அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை - ஜோ பைடன்

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை - ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட நான், நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்த தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்.

அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக நானும், ஜில் பைடனும் ரகசிய சேவைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அதைக் கண்டிக்க ஒரே தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும்" என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com