ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்

ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது.
ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்
Published on

இருப்பினும் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடரும் நிலையில் அவர்களை எதிர்த்து சண்டையிட அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.இதற்கிடையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என ஈராக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.

அப்போது ஈராக்கில் அமெரிக்க போர் நடவடிக்கையை முறையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும் என ஜோ பைடன் அறிவித்தார். அதேசமயம் டிசம்பருக்கு முன்பாக ஈராக்கில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்பதை ஜோ பைடன் தெரிவிக்கவில்லை. ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர்

என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com