அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஜோ பைடன்: டிரம்ப் கடும் தாக்கு

அதிபர் தேர்தலில் இருந்து வெளியேறும் ஜோ பைடனின் முடிவுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஜோ பைடன்: டிரம்ப் கடும் தாக்கு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

இந்த சூழலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார். இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார். மேலும் அதிபர் போட்டியில் இருந்து விலகி எஞ்சியிருக்கும் தனது பதவிக்காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து வெளியேறும் ஜோ பைடனின் முடிவுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வக்கிரமான ஜோ பைடன் அதிபர் பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர், நிச்சயமாக அவர் அதிபராக பணியாற்ற தகுதியானவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் பொய்கள், போலிச் செய்திகள் மூலமாகவே அதிபர் பதவியை அடைந்தார்.

அவரது மருத்துவர் மற்றும் ஊடகங்கள் உள்பட அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவர் (பைடன்) அதிபராக தகுதியற்றவர் என்பதை அறிந்திருந்தார்கள், இப்போது, அவர் நம் நாட்டிற்கு என்ன செய்தார் என்பதைப் பாருங்கள், மில்லியன் கணக்கான மக்கள் நமது எல்லையைத் தாண்டி உள்ளே வருகிறார்கள். சிறைச்சாலைகள், பல மனநல நிறுவனங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற , அவரது அதிபர் பதவியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். ஆனால் அவர் செய்த சேதத்தை மிக விரைவாக நிவர்த்தி செய்வோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்குவோம்" என்று அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com