அமெரிக்கா எச்-1பி விசா மீது மேலும் நெருக்கடி 1 லட்சம் இந்தியர்கள் பாதிப்பு!

எச்-1 பி விசா பெற்றவர்களின் துணைவர்கள், அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்பட்டு வந்த, ஒர்க் பெர்மிட் சலுகையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. #H1B #DonaldTrump
அமெரிக்கா எச்-1பி விசா மீது மேலும் நெருக்கடி 1 லட்சம் இந்தியர்கள் பாதிப்பு!
Published on

வாஷிங்டன்

இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே எச்1 பி விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் எச்1 பி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக உள்ளது.

அந்த வகையில் இப்போது எச்1 பி விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையை அமெரிக்கா அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. இந்த கொள்கையினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 3வது நபர் பணித்தளங்களில் பணியாற்றப் போகிறவர்களுக்கு விசா பெறுவது கடுமையாகிறது.

இதனால், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.

இதுவரை எச்1 பி விசா ஒரே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 3ம் நபர் பணித்தளத்தில் வேலை பார்க்கும் காலம் வரை மட்டுமே வழங்கப்படும். அதாவது 3 ஆண்டுக்கு குறைவான காலகட்டத்துக்குத்தான் வழங்கப்படும்.

3வது நபர் பணித்தளத்தில் பணியாற்றுவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்கிறபோது நிறுவனங்கள் அவர்களின் கல்வித்தகுதி, வழங்கப்படும் பணி, வேலைத்திறன் உள்ளிட்டவை பற்றி குறிப்பிட்டு அதற்கான சான்று ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே எச்1 பி விசா நீட்டிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்து உள்ள நிலையில், இப்போது எச்1 பி விசா வழங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.

தற்போது, எச்-1 பி விசா பெற்றவர்களின் துணைவர்கள், அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்பட்டு வந்த, ஒர்க் பெர்மிட் சலுகையை ரத்து செய்ய டிரம்ப் முடிவெடுத்துள்ளாராம். முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் இந்த சலுகை அமல்படுத்தப்பட்டது. இதை ரத்து செய்வதால், இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இதை பயன்படுத்தி வரும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

"புதிதாக கொண்டுவரப்படவுள்ள விதிமுறை மாற்றங்களில், H-4 பிரிவுக்குள் வரும் துணைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலைக்கான சலுகையை திரும்பபெற திட்டமிட்டுள்ளோம்" என அமெரிக்க குடியுரிமைத் துறை தலைவர் பிரான்சிஸ் சிஸ்னா, நாடாளுமன்ற மேல் சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த அதிகார்பூர்வை அறிவித்து விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com