படகு விபத்து... காலரா பரவல் புரளியால் 96 பேர் பலியான சோகம்

மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மபுதோ,

எரிவாயு வளம் அதிகம் கொண்ட மொசாம்பிக் நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக, 2017-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இதனால், ஏற்பட்ட மோதலில் இருந்து தப்பிக்க முடியாமல் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். 10 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு தப்பி வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 96 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாட்டில் காலரா பரவுகிறது என தவறான தகவல் பரவிய நிலையில், மக்கள் அச்சமடைந்தனர். அது புரளி என தெரியாமல், அதில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் படகில் ஏறியுள்ளனர். ஆனால், படகில் போதிய இடவசதி இல்லாத சூழலில், கூட்ட நெருக்கடியால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உலகளவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் மொசாம்பிக்கில், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 15 ஆயிரம் காலரா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com