பகாமசில் படகு கவிழ்ந்தது; ஹைதி நாட்டு அகதிகள் 17 பேர் பலி

பகாமசில் படகு கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஹைதி நாட்டு அகதிகள் 17 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
உயிர் தப்பிய அகதிகள்
உயிர் தப்பிய அகதிகள்
Published on

நசாவ்,

ஹைதி நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 60 பேர் வரை படகு ஒன்றில் சுமந்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் சென்ற படகு பகாமஸ் கடற்கரை பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகு நீரில் மூழ்கியது. இதனால், படகில் இருந்த பலரும் காப்பாற்ற கோரி கூக்குரலிட்டனர்.

இதுபற்றி பகாமஸ் நாட்டு பிரதமர் பிலிப் டேவிஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், சம்பவம் பற்றி அறிந்ததும், பகாமசின் ராயல் போலீஸ் படை மற்றும் ராயல் பாதுகாப்பு படை உடனடியாக அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.

இதில் மீட்பு குழுவினர் இதுவரை 15 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 17 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

அவர்கள் அனைவரும் புளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதிக்கு இறுதியாக செல்ல இருந்தனர். படகில் 60 பேர் வரை இருக்க கூடும். 25 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் சிலரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடருகிறது என கூறியுள்ளார்.

ஆட்கடத்தல் என்ற சட்டவிரோத வகையில் இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கும் பிரதமர் டேவிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதில் ஈடுபட்டவர்கள் சட்டப்படியான வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்று அகதிகளாக வேறு நாட்டுக்கு செல்லும்போது கடலில் பலத்த காற்று வீச்சு மற்றும் பெரிய அலைகளில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த படகில் பயணித்த பகாமஸ் நாட்டை சேர்ந்த 2 பேரும் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து உள்ளனர். அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் போலீசாருக்கு நன்கு தெரிந்தவர்கள் என்றும் போலீஸ் கமிஷனர் கிளாய்டன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com