அமெரிக்காவில் சுரங்க பாதையில் சடலம் கண்டெடுப்பு, இந்திய சிறுமியாக இருக்கலாம் - போலீஸ்

அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியை தேடும் பணி நடைபெற்ற நிலையில் சுரங்க பாதையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் சுரங்க பாதையில் சடலம் கண்டெடுப்பு, இந்திய சிறுமியாக இருக்கலாம் - போலீஸ்
Published on

ஹூஸ்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ரிச்சர்ட்சன் நகரில் தனது மனைவி, 4 வயது சொந்த மகள் மற்றும் 3 வயது வளர்ப்பு மகள் ஷெரின் மேத்யூசுடன் வசித்து வந்தவர் தந்தை வெஸ்லி மேத்யூஸ். இவர்கள் அனைவரும் இந்தியர்கள். அக்டோபர் 7-ம் தேதி, சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்தாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.

இது குறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் போலீசில் புகார் செய்தார். சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை போலீசார் தேடினர். ஆனால் சிறுமி என்ன ஆனாள் என்றோ, எங்கு போனாள் என்றோ தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை போலீசார் பயன்படுத்தினர். அதே நேரத்தில் இந்த வழக்கில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான வெஸ்லி தம்பதியர், ஒத்துழைக்க மறுப்பதாக போலீசார் கூறினர். வெஸ்லி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆன நிலையில் மேத்யூஸ் வீட்டில் இருந்து சுமார் அரை மையில் தொலவில் சுரங்க பாதையில் சிறுமியின் சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

சுரங்க பாதையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன இந்திய சிறுமியாக இருக்கலாம் என போலீஸ் கூறுகிறது. இருப்பினும் உறுதி செய்யப்படவில்லை. மோப்ப நாய் உதவியுடன் அமெரிக்கா போலீஸ் சடலத்தை கண்டுபிடித்து உள்ளது. இருப்பினும் அடையாளம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது தொடர்பாக போலீஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க மருத்துவர்கள் சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com