பொலிவியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவ தளபதி கைது

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
பொலிவியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி
Published on

சுக்ரே,

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவ தளபதி கைது செய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற வன்முறையில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்க்க ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா சதித்திட்டம் தீட்டினார்.

அவரது உத்தரவின்பேரில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை முற்றுகையிட்டனர். மேலும் கவச வாகனம் மூலம் நாடாளுமன்ற கதவுகளை உடைக்கும் முயற்சியும் நடைபெற்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறுகையில், அதிபர் லூயிஸ் ஆர்சை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஜீனைன் அனெஸ் உள்பட பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வன்முறையில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதன் முடிவில் சதித்திட்டதுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த படைகள் பின்வாங்கியதால் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

ராணுவத்தின் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்று திரளும்படி பொதுமக்களுக்கு பொலிவியா அதிபர் லூயிஸ் ஆர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com