பெலாரஸ் நாட்டு அதிபரை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளரை கைது செய்ய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போர் விமானத்தால் மறித்து அவசரமாக தரை இறங்க வைத்தனர்

பெலாரஸ் நாட்டு அதிபரை விமர்சனம் செய்து வரும் பத்திரிகையாளரை பிடிப்பதற்காக பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அவசரமாக தரை இறங்க வைத்து அவரை கைது செய்தனர்.
பெலாரஸ் நாட்டு அதிபரை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளரை கைது செய்ய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போர் விமானத்தால் மறித்து அவசரமாக தரை இறங்க வைத்தனர்
Published on

எதிரிகளை ஒடுக்குகிறார்

ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ. கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து பதவியில் இருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.அதைத்தொடர்ந்து, தன்னை விமர்சிப்பவர்களை அவர் ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், சிலர் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். அதுபோல், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோடாசெவிச் என்ற பத்திரிகையாளர், அதிபரை விமர்சனம் செய்து வருகிறார். அதிபரின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோடாசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்தபடி, அதிபர் தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக எழுதி வருகிறார்.

இந்தநிலையில், கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில், எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து ஒரு கருத்தரங்கில் ரோமன் புரோடாசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். அந்த விமானத்தில் அவருடன் 171 பயணிகள் இருந்தனர்.

விமானம், பெலாரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலாரஸ் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார். அதே சமயத்தில், பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டிச் சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பத்திரிகையாளர் ரோமன் புரோடாசெவிச்சை பெலாரஸ் போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோடாசெவிச் கூச்சலிட்டார். அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலாரஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

இதற்கிடையே, இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு அதிச்சிகரமான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன் கூறியதாவது:-

இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளரை உடனே விடுவிக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஐரோப்பிய ஆணையம் 25-ந் தேதி விவாதித்து முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்தாலி, சைப்ரஸ், லாட்வியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த பிரச்சினயை மேலை நாடுகளும், ஐரோப்பிய ஆணையமும் அரசியல் ஆக்குவதாகவும், அவசர கதியில் அறிக்கை விடுவதாகவும் பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com