

காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடும்பொழுது கடந்த மார்ச் மாதத்தில் 20 சதவீதம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
இதன்படி, ஆப்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்கள் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாக்குதல்களில் 305 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 350 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. கடந்த மார்ச்சில், பெருமளவிலான தாக்குதல்கள் காபூல், நங்கர்ஹார், கந்தஹார், ஹெல்மண்ட் மற்றும் கஜினி மாகாணங்களில் நடந்துள்ளன.
இதுபற்றி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான செய்தி தொடர்பு அதிகாரி ரகமதுல்லா ஆந்தர் கூறும்பொழுது, இந்த தாக்குதல்களை தலீபான் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். அவற்றில் சிலவற்றிற்கு அவர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.
சில தாக்குதல்களை அவர்கள் மறுத்துள்ளனர். ஒட்டுமொத்த பொறுப்பும் தலீபான் பயங்கரவாதிகள் மீதே விழுந்துள்ளது என கூறியுள்ளார். கடந்த பிப்ரவரியில் மக்களில் 264 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 278 பேர் காயமடைந்து உள்ளனர்.