லண்டன் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் போரிஸ் ஜான்சன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்

லண்டன் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல் நிலை தேறி வருகிறது. அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
லண்டன் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் போரிஸ் ஜான்சன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்
Published on

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் (வயது 55) கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அவருக்கு அந்த வைரஸ் தாக்கி இருப்பது 2 வாரங்களுக்கு முன் தெரியவந்தது. இருப்பினும் லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். அரசு பணிகளையும் கவனித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் டாக்டர்கள் ஆலோசனைப்படி லண்டன் செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாளில் அவரது உடல்நிலை, கொஞ்சம் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் இரவு, பகலாக சிகிச்சை அளித்த நிலையில் உடல் நிலை சற்று தேறியது. அதைத்தொடர்ந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை நன்றாக தேறி வரு கிறது. லேசான நடைபயிற்சி மேற்கொள்கிற அளவுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் இல்ல செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் கூறியதாவது:-

ஓய்வு நேரங்களுக்கு இடையே பிரதமர் சிறிது நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் தனக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுடன் உரையாடுகிறார். தன்னை சிறந்த முறையில் கவனித்த டாக்டர் குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் தினமும் ஒரு முறை அறிக்கை அளிக்கும். அவரது எண்ணம் எல்லாம் இந்த பயங்கர தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அவர் உடல் நிலை வேகமாக முன்னேறி வருவதாகவும், ஓய்வு நேரங்களில் அவர் ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்து கொண்டே சினிமா படங்கள் பார்ப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் பத்திரிகை கூறி உள்ளது.

பத்திரிகைகளில் வெளியாகிற புதிர்களை (சுடோகு) அவர் போட்டு பார்ப்பதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் போரிஸ் ஜான்சன், பார்வையாளர்கள் தன்னை வந்து சந்திக்க அனுமதி அளித்தாரா? கர்ப்பமாக உள்ள தனது வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்சை பார்த்தாரா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து, பல தரப்பினரிடம் இருந்தும் ஏராளமான வாழ்த்து அட்டைகள் குவிந்து வருகின்றனவாம். மேலும் அவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன், மகன் போரிஸ் ஜான்சன் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது; பலியானவர்களின் எண்ணிக்கையும் 9 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழக கொரோனா தகவல் மையம் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com