ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசி அசத்திய சிறுவன்

ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறுவனிடம் இவ்வளவு நன்றாக இந்தி பேச எங்கு கற்றாய்? என ஆச்சரியமுடன் அவர் கேட்டார்.
ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசி அசத்திய சிறுவன்
Published on

டோக்கியோ,

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற குவாட் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.

இந்த மாநாடு, இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வம் உள்ள உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அழைத்துள்ளார். பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவர் இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அவருக்கு தூதரக அதிகாரிகள் உள்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தங்கவுள்ள நியூ ஓட்டானி ஓட்டலுக்கு சென்றார். அவரை வரவேற்க இன்று காலை ஓட்டலுக்கு வெளியே குழந்தைகள் உள்ளிட்டோர் திரண்டிருந்தனர்.

அவர்களில் ரித்சுகி கோபயாஷி என்ற சிறுவன் இந்தி மொழியில் பிரதமரிடம் பேசியுள்ளான். ஆட்டோகிராப் வாங்குவதற்காக நான் வந்துள்ளேன் என பிரதமரிடம் கூறியுள்ளான்.

அந்த சிறுவன் இந்தியில் தங்கு தடையின்றி பேசியதில் ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி சிறுவனிடம், இவ்வளவு நன்றாக இந்தி பேச எங்கே கற்று கொண்டாய்? உனக்கு இந்தி நன்றாக தெரியுமா? என கேட்டார். இதன்பின்னர் சிறுவன் வைத்திருந்த அட்டையை வாங்கி அதில் கையெழுத்து போட்டு கொடுத்து, வாழ்த்தி விட்டு சென்றார்.

இதுபற்றி சிறுவன் ரித்சுகி கூறும்போது, நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் (பிரதமர் மோடி) நான் காகிதத்தில் எழுதியிருந்த செய்தியை வாசித்து பார்த்தார். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவரிடம் இருந்து கையெழுத்தும் வாங்கி கொண்டேன் என கூறியுள்ளான்.

பிரதமரின் 2 நாள் வருகையை முன்னிட்டு இந்திய வம்சாவளியினர் ஓட்டலின் முன் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹர் ஹர் மோடி, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட கோஷங்களையும் கேட்க முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com