

பிரேசிலியா,
ஒமிக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரான் கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தெற்கு ஆப்பரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஒருபடி மேலே சென்று ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை விதித்துள்ளன.
இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலிலும் இரண்டு நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த இரண்டு பயணிகளுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் என்றும் பிரேசில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.