நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த பிரேசில் அரசு

சுற்றுச்சூழல் துறையின் விதிகளை மீறியதாக நெய்மாருக்கு பிரேசில் அரசு அபராதம் விதித்துள்ளது.
நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த பிரேசில் அரசு
Published on

பிரேசிலியா,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். இவர் பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி ஒன்றை அமைத்துள்ளார். இதற்கான பணிகள் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, செயற்கை ஏரி அமைப்பதற்கு பிரேசில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறாதது, நதி நீரை மடைமாற்றி சேகரித்தது, நிலத்தை வெட்டியது போன்ற விதிமீறல்களில் அவர் ஈடுபட்டார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசு தடை விதித்துள்ளது.

ஆனால் நெய்மர் அந்த ஏரியில் நீராடியதாகவும், பார்ட்டி நடத்தியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பங்களா அமைந்துள்ள மங்கராதிபா பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை ஏரி அமைத்ததில் சுற்றுச்சூழல் விதி மீறல்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரேசில் அரசு நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.28.6 கோடி) அபராதம் விதித்துள்ளது. நெய்மருக்கு அண்மையில் வலது கணுக்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இந்த அபராதம் தொடர்பாக அவர் சட்ட ரீதியாக முறையிட 20 நாட்கள் அவகாசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com