

பிரேசிலியா,
பிரேசிலில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் ஜெயிர் போல்சனரோ (வயது 67) ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, இவரது வயிற்றில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து ஜெயிர் போல்சனரோவின் உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயிர் போல்சனரோ நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்தியிரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு என்ன மாதிரியான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் இல்லை. அதே சமயம், ஜெயிர் போல்சனரோ நலமாக இருப்பதாக அவரது மனைவி மிச்செல் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் குடல் அடைப்பு பிரச்சினைக்காக ஜெயிர் போல்சனரோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.