

லண்டன்,
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
அத்துடன் ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட் தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இன்று கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களுடன் கலந்து ஆலோசித்த பிரதமர் தெரசா மே, "பிரெக்ஸிட் ஒப்பந்தமானது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நான் பதவியை துறக்கவும் தயார். எங்கள் நாட்டிற்காகவும், எங்கள் கட்சிக்காகவும் சரியானதை செய்ய நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். மேலும் அவர் பதவி விலகுவதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.
தெரசா மேவின் இந்த முடிவு பிரெக்ஸிட் தொடர்பான அவரது முயற்சிக்கு பலன் தரும் என நம்பப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் தொடர்பான அடுத்தகட்ட கலந்தாலோசனைகளில் தாம் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையாது என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.