

லண்டன்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள விவகாரத்தில் புதின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. புதின் மற்றும் ரஷியாவின் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் மேலை நாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மகள்கள் மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதாவது, புதினின் இரண்டு மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா ஆகியோருக்கு எதிராக பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் அடங்கிய பொருளாதர தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இத்தகைய தடையை பிரிட்டன் விதித்துள்ளது.
இது குறித்து பிரிட்டன் கூறுகையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தற்போது வரை 1,200 ரஷியர்கள் மற்றும் ரஷியாவுடன் தொடர்புடைய 16 வங்கிகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்காவும் இதேபோன்ற நடவடிக்கையை புதின் மகள்களுக்கு எதிராக மேற்கொண்டது நினைவிருக்கலாம்.