இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு

100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.நுவரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் 21 பயணிகள் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள பேருந்தில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் புத்த மத துறவிகள் எனவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இலங்கையில் ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரம் சாலைவிபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இலங்கையில் இன்று நடைபெற்றுள்ள இந்த விபத்துதான் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்று என அதிகாரிகள் கூறினர்.






