

சியோல்,
தென்கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தலைநகர் சியோலில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழலகங்களை அமைத்து உள்ளது.
கொரோனாவால் பாதிப்படைந்த நபர்கள் யாரேனும் இதற்குள் நுழைய முற்பட்டால் அவர்களை ஸ்கேன் செய்து, காய்ச்சல் இருப்பது உறுதியானால் அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுத்து விடுகிறது.
கொரோனா மற்றவர்களுக்கு பரவி விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டு உள்ள இந்த நிழலகங்கள், பாதிப்படைந்த நபர்களை தடுத்து நிறுத்துவதுடன், பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. இதன் வெளிப்புறம் வெப்பம் கண்டறியும் கேமிராக்கள் மற்றும் புறஊதா கதிர்களை செயலிழக்க செய்யும் உட்புறம் ஆகியவற்றுடன் குளிர்சாதன வசதி, இலவச வைபை, செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் நோய் தீர்க்கும் வகையிலான இசையை கேட்கும் வசதியும் அமைந்துள்ளன.
அதிகம் வெப்பம் நிறைந்த சியோல் நகரத்தில், வெளிப்புறம் இருப்பதனை விட வீடு உள்ளிட்ட உட்புறங்களிலேயே கொரோனா வைரசானது எளிதில் பரவும் ஆபத்து உள்ளது. அதனால், அதிக வெப்பசூழல் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ளவும் மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் இதுபோன்றதொரு சூழலை உருவாக்க நாங்கள் விரும்பினோம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுபோன்ற அமைப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
கொரோனா வைரசின் பாதிப்புகளை எதிர்த்து போராடுவதில் தென்கொரியா அதிக திறன் பெற்றிருக்கிறது. 5 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகையை கொண்டிருக்கும் அந்நாடு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள தகவலின்படி, இதுவரை 15 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளையும் மற்றும் 305 பலி எண்ணிக்கையையும் கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது.