இணையத்தில் கேலிக்கு உள்ளாகும் தொழிலதிபர் ஜெப் பெசோஸ் திருமண பத்திரிகை


இணையத்தில் கேலிக்கு உள்ளாகும் தொழிலதிபர் ஜெப் பெசோஸ் திருமண பத்திரிகை
x
தினத்தந்தி 26 Jun 2025 9:35 PM IST (Updated: 27 Jun 2025 2:21 PM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையில் பறவைகள், பட்டாம்பூச்சிகள், படகு, பாலம் என பல சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

ரோம்,

அமேசான் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஜெப் பெசோஸ் (வயது 61), உலகின் 3-வது பெரிய பணக்காரர் ஆவார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இவர் தனது முதல் மனைவியான மெக்கன்சி ஸ்காட்டை 2020-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்செஸ்(55) என்ற பெண்ணை ஜெப் பெசோஸ் காதலித்து வந்தார். இந்த நிலையில் தனது காதலியை கரம் பிடிக்க ஜெப் பெசோஸ் முடிவு செய்தார். இருவரின் திருமணம் இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தற்போது அங்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன.

சுமார் ரூ.100 கோடி செலவில் மிக ஆடம்பரமாக நடத்தப்படும் இந்த திருமணத்துக்கு உலக பணக்காரர்கள் பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வெனிசில் நட்சத்திர ஓட்டல்கள், படகு டாக்சிகள் ஆகியவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜெப் பெசோஸ்-லாரன் சான்செஸ் ஜோடியின் திருமண பத்திரிகை என்ற பெயரில் இணையத்தில் ஒரு அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. அந்த பத்திரிகையில், திருமணத்திற்கு வருகை தருபவர்கள் பரிசுப் பொருட்கள் எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் சார்பாக வெனிஸ் நகரின் இயற்கை வளங்களை பாதுகாக்க 'யுனெஸ்கோ வெனிஸ்' அலுவலகத்திற்கு நன்கொடை வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், அந்த பத்திரிகையின் வடிவமைப்பு சமூக வலைதளங்களில் தற்போது கேலிக்கு உள்ளாகி வருகிறது. பள்ளி குழந்தைகள் படம் வரைவது போல் பறவைகள், பட்டாம்பூச்சிகள், படகு, பாலம் என பல சித்திரங்கள் அந்த பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம். வெனிஸ் நகரத்தின் அம்சங்களை குறிப்பிடும் வகையில் இந்த சித்திரங்கள் வரையப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ஒரு உலக பணக்காரரின் திருமண பத்திரிகை இப்படி ரசனையின்றி வடிவமைக்கப்படுவதா? என்று இணையத்தில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story