மகனே ஆனாலும்... பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை

துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
மகனே ஆனாலும்... பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை
Published on

நியூயார்க்,

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன் ஹன்டர் பைடன். கடந்த 2018-ம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கும்போது, போதைபொருள் பயன்பாடு பற்றி பொய் கூறினார் என ஹன்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

போதையின் பாதிப்பில் இருந்தபோது, அவர் ஆயுதம் வாங்கியுள்ளார் என்றும், குண்டு நிரப்பப்படாத துப்பாக்கியை 11 நாட்கள் வரை ஹன்டர் தன்வசம் வைத்திருந்துள்ளார் என்றும் அவர் மீது சட்டவிரோத குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஹன்டர் மீது உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட கூடும்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ஹன்டரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர், தன்னுடைய மகனை பாதுகாப்பதற்காக, அதிபர் பைடன் பதவியை தவறாக பயன்படுத்தி விட்டார் என குற்றச்சாட்டாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டில் ஹன்டர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தன்னுடைய மகனின் தண்டனையை பைடன் குறைத்து விடுவாரா? என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியர்ரேவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பியர்ரே, இந்த கேள்விக்கு முன்பே நான் பதில் அளித்து உள்ளேன். இந்த கேள்வியானது, நீண்ட காலத்திற்கு முன்பு என்னிடம் கேட்கப்படவில்லை. 2 வாரங்களுக்கு முன்பே கேட்கப்பட்டு இருந்தது. என்னுடைய பதிலை அளித்து இருந்தேன். அதில் இல்லை என்று உறுதியாக தெரிவித்து இருந்தேன் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் இருந்து வருகிறது. இதனால், வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை துப்பாக்கி வைத்திருக்கின்றனர். துப்பாக்கி சூடு நடத்தி அவ்வப்போது பொதுமக்களில் பலர் பலியாகி வருகின்றனர். இதற்கு பைடன் கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இதனால், கடுமையான சட்டம் இயற்றவும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் ஹன்டர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மகனே ஆனாலும் பைடன் மன்னிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com