

ஜகார்த்தா,
பிரதமர் மோடி கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 5 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியா சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை தலைநகர் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களும் ராணுவம், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. அப்போது இந்தோனேசியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா துணை நிற்கும் என்றும் மோடி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.
அப்போது பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ்ஜிய ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதேபோல் 2025-ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.3 லட்சம் கோடி) உயர்த்துவது எனவும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். இந்தியா- இந்தோனேசியா இடையேயான வர்த்தக பரிமாற்றம் 2017-ம் ஆண்டில் 18.13 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு முடிந்த பின்னர் பிரதமர் மோடி, அதிபர் விடோடோவுடன் சென்று ஜகார்த்தா நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அர்ஜூன விஜய ரத சிலையை சென்று பார்வையிட்டார். மகாபாரத குருஷேத்திர போர்க்கள காட்சியை விளக்கும் விதமாக 8 குதிரைகள் பூட்டிய ரதத்தில் அர்ஜூனன் வில் மற்றும் அம்புடன் உள்ளது போன்ற இந்த சிலை 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஆகும்.
இந்திய-இந்தோனேசிய காற்றாடி கண்காட்சியில் இருவரும் பங்கேற்று உற்சாகத்துடன் காற்றாடிகளை பறக்கவிட்டனர். இதேபோல் ஜகார்த்தா நகரில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தொழுகை நடத்தக் கூடிய கிழக்காசியாவின் மிகப்பெரிய இஸ்திக்லால் மசூதியையும் மோடி பார்வையிட்டார்.
இதையடுத்து, ஜகார்த்தா கன்வென்ஷன் மையத்தில் இந்திய சமூகத்தினரிடையே பேசிய மோடி, இந்தோனேசிய மக்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று அறிவித்தார்.