

பீஜிங்,
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. இதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே வேறு எந்த நாடுகளும் தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது.
இந்த சூழலில், தைவானின் முக்கிய எதிர்க்கட்சியான குமிங்டாங் கட்சித் தலைவி செங் லி-வுன், பீஜிங்கில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், "தைவான் சுதந்திரத்தை ஒருபோதும் ஏற்க முடியாது" என அதிபர் ஜின்பிங் உறுதியாக தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், சீனாவின் 16 போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்து மிரட்டல் விடுத்தன. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம், ‘ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் ராணுவ மிரட்டல் என சீனா நாடகமாடுகிறது’ என்று விமர்சித்துள்ளது.
மேலும், “தைவானின் எதிர்காலத்தை எங்கள் நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்" என தைவான் அதிபர் அலுவலகம் சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதனால் தைவான் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.