

ஒட்டாவா,
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் காட்டு ஓநாய் (கொயோட்டி) குட்டி ஒன்று சாவகாசமாக உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனட நாட்டில் உள்ள டொராண்டோவின் கிறிஸ்டி பிட்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆலிஸ் கென்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்யும் பணியாளர் வருவதற்காக வழக்கம்போல தன் வீட்டின் கதவைத் திறந்து வைத்திருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த காட்டு ஓநாய் குட்டி (கொயோட்டி) ஒன்று, நேராக மாடியில் உள்ள படுக்கையறைக்குச் சென்று படுக்கையில் சுருண்டு படுத்து உறங்கியுள்ளது.
சுத்தம் செய்யும் பணிக்காக மாடிக்குச் சென்ற பணியாளர், படுக்கையில் விலங்கு ஒன்று படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முதலில் அதனை நரி என நினைத்த அவர், உடனடியாக வீட்டின் உரிமையாளரான ஆலிஸுக்குத் தகவல் கொடுத்தார். ஆலிஸ் வந்து பார்த்தபோது, ஆள் நடமாட்டத்தைக் கண்டு மிரண்ட அந்த குட்டி ஓநாய், படுக்கைக்கு அடியில் சென்று பதுங்கிக்கொண்டது.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், வனவிலங்கு மீட்பு மையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், படுக்கைக்கு அடியில் பதுங்கியிருந்த அந்த குட்டி காட்டு ஓநாயை பத்திரமாகப் பிடித்தனர். தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த விலங்கிற்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்த குழுவினர், பின்னர் அதனைப் பாதுகாப்பாக விடுவித்தனர்.
குடியிருப்புப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு பொதுமக்கள் உணவு அளிப்பதாலேயே, அவை மனிதர்களுக்குப் பயப்படாமல் வீடுகளுக்குள் நுழையும் பழக்கத்திற்கு ஆளாகின்றன என வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.