கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைப்பு: இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா..?

கனடாவின் கல்வி விசாக்களை அதிகம் பெறும் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைப்பு: இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா..?
Published on

ஒட்டாவா,

வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கனடாவில் தங்கி கல்வி பயில அந்த நாட்டு அரசு விசாக்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் சமீப ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கனடாவின் குடிவரவுத்துறை மந்திரி மார்க் மில்லர் கூறுகையில், "கனடாவில் தற்காலிக வசிப்பிடத்தை நிலையாக பராமரிக்கவும், 2024-ம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் மேலும் வளர்ச்சி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கல்வி விசாவில் உச்சவரம்பை அமைக்கிறோம். அதன்படி நடப்பு ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் 35 சதவீதம் குறைக்கப்படும்.

எனவே இந்த ஆண்டு 3,60,000 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். 2025-ம் ஆண்டு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறித்து இந்த ஆண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று மார்க் மில்லர் கூறினார்.

கனடா அரசின் இந்த கட்டுப்பாட்டால் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஏனெனில் கனடாவின் கல்வி விசாக்களை அதிகம் பெறும் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கு கனடா கல்வி விசா வழங்கியது. இதில் 3,19,000 பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com