

கனடாவில் வசிக்கும் 2 லட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு 2027-ம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர குடியுரிமை வழங்க அந்த நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், குடியேற்றக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்து இந்த ஒருமுறை சிறப்புத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் இருந்து புலம்பெயரும் லட்சக்கணக்கான மக்களுக்கும், குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கும் கனடா நாடு ஒரு மறு தாயகமாக விளங்கி வருகிறது. பாதுகாப்பான சூழல், உயர்தர வாழ்க்கை முறை மற்றும் பன்முக கலாசாரத்தை மதிக்கும் குணம் ஆகியவற்றால், வேலை மற்றும் கல்விக்காக இந்தியர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் முதன்மை நாடாக கனடா திகழ்கிறது.
தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிதி மேலாண்மை போன்ற துறைகளில் இந்திய நிபுணர்களுக்கு இங்கு மிக உயரிய பதவிகளும், அபரிமிதமான தொழில்முறை வளர்ச்சியும் கிடைக்கின்றன. எளிமையான வணிகக் கொள்கைகள் காரணமாக, இந்தியப் புலம்பெயர்ந்தோர் பலர் தொழில்முனைவோராக மாறி, அங்குள்ள பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கனடாவில் வசிக்கும் 2 லட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு 2027-ம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர குடியுரிமை வழங்க அந்த நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், குடியேற்றக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்து இந்த ஒருமுறை சிறப்புத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த திட்டத்தை அறிவித்து செய்தியாளர் சந்திப்பில் பேசினார், அப்போது அவர் "தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பல ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் உக்ரைனியர்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டினர் மனிதாபிமான அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்" என்று தெரிவித்தார்.
இது பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பணியாளர் பிரிவில், அந்தந்த மாகாணங்களின் தொழிலாளர் தேவைக்கேற்ப ஆட்களைத் தேர்வு செய்ய மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. குறைந்த ஊதியப் பணிகளுக்கான விண்ணப்பங்களின் செல்லுபடியாகும் காலம் ஓராண்டில் இருந்து இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பணிகளுக்குத் தகுதியான பணியாளர்களைத் தேர்வு செய்ய மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் கனடா குடியுரிமைக்காக விண்ணபித்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.