காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் நான்காவது இந்தியர் கைது.. கனடா நடவடிக்கை

கைது செய்யப்பட்ட இந்தியர் ஏற்கனவே உரிமம் பெறாத துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதையடுத்து, இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
Published on

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது 45), கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டான். கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரித்தது.

இதற்கிடையே, பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில்  கரன் பிரார் (வயது 22), கமல்ப்ரீத் சிங் (வயது 22) கரன்ப்ரீத் சிங் (வயது 28) ஆகிய மூன்று இந்தியர்களை கடந்த 3ம் தேதி கனடா போலீசார் கைது செய்தனர். எட்மாண்டன் பகுதியில் வசித்து வந்த அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு இந்தியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயது நிரம்பிய அமர்தீப் சிங் என்ற அந்த நபர், சர்ரேயின் பிராம்ப்டன் பகுதியில் வசித்து வந்தார். அவர் மீது கொலை மற்றும் கொலை சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் ஏற்கனவே உரிமம் பெறாத துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது நிஜ்ஜார் கொலை வழக்கில் அவர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

நிஜ்ஜார் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான விசாரணையின் தன்மையை இந்த கைது காட்டுகிறது என்று விசாரணைக்குழு அதிகாரி மன்தீப் முகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com