கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒட்டாவா,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை வாங்குவதற்கு 10 மில்லியன் டாலரை இந்தியன் ரெட் கிராஸ் அமைப்புக்கு வழங்கியுள்ளோம். மேலும் கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com