

கனடா,
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் கடந்த 2009-ல் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிக்கட்ட போரில் சுமார் 1 லட்சம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்போரின் 14-வது ஆண்டு நினைவு தினம் கனடாவில் அனுசரிக்கப்பட்ட நிலையில், அதில் கலந்து கொண்டு பேசிய ட்ரூடோ, மே 18-ம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்றும் கூறினார்.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இலங்கை, கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கைக்கான கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், கனடா தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற அறிவிப்புகள், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் நல்லிணக்கத்தையும், வெறுப்பையும் வளர்ப்பதாக இலங்கை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.