

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த நீண்டகால போரால் ஒன்றுமறியாத பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், ஒருபுறம் நாட்டில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.
கடந்த வாரம் காபூல் நகர துணை மேயர் சென்ற வாகனத்தில் வெடிகுண்டு ஒன்று கட்டி வைக்கப்பட்டு வெடிக்க செய்யப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், தலைநகர் காபூலில் இன்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர்.
இந்த சம்பவத்தில் அந்நாட்டு எம்.பி.யான கான் முகமது வர்தாக் என்பவர் உள்பட 15 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ஆப்கானிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி தாரிக் ஆரியன் கூறும்பொழுது, இன்று நடந்த தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறியுள்ளார்.
சமீப காலங்களாக காபூல் நகரில் நடந்து வரும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எல். என்ற ஆயுத குழு பொறுப்பு ஏற்று கொண்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.