போர் நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை பெர்ஜர் இன்று விடுவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை பெர்ஜர் இன்று விடுவிப்பு
Published on

கான் யூனிஸ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.

ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டன. இதன்படி, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதனால், பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு உள்ள இஸ்ரேல் மக்களை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது. எனினும், இவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 19-ந்தேதி முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து, பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆனது, 42 நாட்கள் நீடிக்கும். இதன்படி, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

முதல்கட்டத்தில் இஸ்ரேல் மக்கள் 3 பேர் கடந்த 19-ந்தேதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், 2-ம் கட்டத்தில் இஸ்ரேல் பணய கைதிகளில் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் 4 பேரும் இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஆவர். இதற்கு ஈடாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதன்படி, கடந்த வாரம் சனிக்கிழமை (25-ந்தேதி) மதியம் பரஸ்பரம் இவர்களை விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இரு தரப்பிலும் கைதிகள் விடுவிக்கப்பட்டு வரும் சூழலில், பணய கைதிகளில் ஒருவரான இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஆகம் பெர்ஜர் (வயது 20) என்பவரை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுவித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக குண்டுகளால் சேதமடைந்த கட்டிடங்கள் மீது மக்கள் திரளாக நின்றபடியும், தெருக்களில் ஒன்று கூடியும் காணப்பட்டனர்.

பெர்ஜரை, அந்த கூட்டத்தினரின் முன் ஊர்வலம்போல் அழைத்து சென்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இஸ்ரேல் அரசும், பெர்ஜர் வந்து விட்டார் என பின்னர் உறுதி செய்துள்ளது. கடத்தப்பட்ட 5 இளம் இஸ்ரேல் வீராங்கனைகளில் பெர்ஜரும் ஒருவர். மற்ற 4 பேர் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இவர் தவிர, ஆர்பெல் யெஹவுட் (வயது 29) மற்றும் கதி மோசஸ் (வயது 80) என்ற முதியவர் ஆகியோரும் இன்று விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் தவிர, தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அவர்கள் அதிகாரப்பூர்வ முறையில் அடையாளம் காணப்படவில்லை.

ஹமாஸ் தாக்குதலின்போது, இஸ்ரேல் மக்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோருடன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலரும் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் ஒரு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

எனினும், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேர் இன்னும் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்களில் 2 பேர் மரணம் அடைந்து விட்டனர் என நம்பப்படுகிறது. இதேபோன்று, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ள கைதிகளில் 30 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

இவர்கள் இஸ்ரேல் மக்களுக்கு எதிராக கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் என குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். யெஹவுட் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட இருந்த நிலையில், வடக்கு காசா எல்லை பகுதியை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் அதன்பின்னர் அவர் விடுவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பணய கைதிகளில் 3 ஆண்கள் வருகிற சனிக்கிழமை விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com