

புதுடெல்லி,
புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் நிறுவனம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.
இந்த 2 தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. எனினும் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தையும் சீரம் நிறுவனம் பெற்று தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.
ஆனால் இந்த தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் கோடிக்கணக்கிலான தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வைத்துள்ளது.
அதில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வருகிற டிசம்பர் மாத இறுதியில் காலாவதியாகின்றன. எனவே இந்த கொரோனா தடுப்பூசிகளை கோவாக்ஸ் என்கிற பெயரில் இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது.
இந்த நிலையில் இந்தோனேசியாவுக்கு 5 கோடி கோவாக்ஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.