குடியேற்ற சோதனை இல்லாமல் விமனத்தில் சென்ற 3 இத்தாலியர்கள்- ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

ஏர் இந்தியாவின் உள்நாட்டு-சர்வதேச விமான இயக்க நடைமுறைகளில் 5 விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா
Published on

புதுடெல்லி:

டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 4-ந்தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த 3 பேர் அமிர்தசரசில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தனர். அந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் டெல்லி வந்தடைந்தது.அதன்பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் டெல்லியில் இருந்து லுஃப்தான்சா விமானத்தில் முனிச் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் கட்டாய குடியேற்ற சோதனைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எப்படி நடந்தது?

சிறிய விமான நிலையங்களில் இருந்து பயணிகளை முக்கிய விமான நிலையங்களுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து சர்வதேச விமானங்களில் பயணிக்கச் செய்யும் முறையை ஏர் இந்தியா பின்பற்றுகிறது. அதன்படி, அமிர்தசரசில் இருந்து டெல்லி வந்த 3 இத்தாலியர்களுக்கும் உள்நாட்டு பயணத்துக்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், அமிர்தசரசிலேயே டெல்லியில் இருந்து முனிச் செல்லும் லுஃப்தான்சா விமானத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.டெல்லி வந்தபோது சர்வதேச பயணிகள் என்று அடையாளம் கண்டு, அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சர்வதேச பயணிகள் செல்லும் மாற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதன் மூலம் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் சர்வதேச புறப்பாடு பகுதிக்கு சென்று முனிச் விமானத்தில் ஏறியுள்ளனர்.

விதிமீறல்

இந்த சம்பவத்தில் ஏர் இந்தியாவின் உள்நாட்டு-சர்வதேச விமான இயக்க நடைமுறைகளில் 5 விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளை தனித்தனியாக பிரிக்காதது, உள்நாட்டு பயணச்சீட்டு வைத்திருந்தவர்கள் சர்வதேச பயணிகள் செல்லும் பகுதிக்குள் நுழைந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் குறித்து அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், விமான நிலையத்தில் பயணிகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பதிவேடு சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு

3 இத்தாலியர்கள் குடியேற்ற சோதனை இல்லாமல் வெளிநாடு சென்றது பின்னர் மேற்கொள்ளப்பட்ட பதிவேடு சரிபார்ப்பின்போதுதான் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறுகளுக்கு உரிய விளக்கம் அளிக்காவிட்டால், கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com