சி.இ.பி.ஏ. பேச்சுவார்த்தை 3 மாதங்களில் நிறைவு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது; பிரதமர் மோடி

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான சி.இ.பி.ஏ. ஒப்பந்தம் 3 மாதங்களில் கையெழுத்திடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சி.இ.பி.ஏ. பேச்சுவார்த்தை 3 மாதங்களில் நிறைவு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது; பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான (சி.இ.பி.ஏ.) பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டு உள்ளது.

இதற்காக, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான காணொலி உச்சி மாநாடு இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி மற்றும் அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜையத் அல் நஹ்யான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 6 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரில் இருந்து 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும்.

இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, இரு நாடுகளும், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான (சி.இ.பி.ஏ.) பேச்சுவார்த்தையில் இன்று கையெழுத்திட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் நிறைவேற பல ஆண்டுகள் ஆக கூடிய சூழல் உள்ள நிலையில், 3 மாதங்களுக்குள் ஒரு முக்கிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முடிவை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடியான சூழலில், இந்திய குடிமக்களை ஐக்கிய அரபு அமீரகம், அவர்களது நாட்டில் நன்றாக கவனித்து கொண்டது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் உருவான 50வது ஆண்டை நீங்கள் கொண்டாட உள்ளீர்கள். எங்களுடைய நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாட்டத்தினை நாங்கள் தொடங்க இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com