457 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரைபடத்தில் மாற்றம்: ஐநா ஒப்புதல்

புதிய உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா பெரிதாக தோற்றம் தரும் நிலையில் வட அமெரிக்கா, ஐரோப்பாவின் பரப்பு சிறியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது|

457 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரைபடத்தில் மாற்றம்
ஐநா ஒப்புதல்
Published on

நாடுகளின் உண்மையான நிலப்பரப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

16-ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பாரம்பரிய உலக வரைபடத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி, துல்லியமான நிலப்பரப்பைக் காட்டும் நோக்கில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான டோகோ (Togo) முன்னெடுத்த இத்தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட மொத்தம் 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளது. உலகிற்கு இப்போது வேறு பல முக்கியப் பிரச்சினைகள் இருக்கும் போது, ஐ.நா வரைபடங்களை மாற்றுவதில் கவனம் செலுத்தக் கூடாது என அமெரிக்கா வாதிட்டது.

மேலும், எஸ்தோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

தற்போது பள்ளிகள், ஊடகங்கள் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் நாம் பரவலாக பயன்படுத்தும் உலக வரைபடம் 1569-ஆம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் கடல் வழிப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகைக்கு தொலைவில் இருக்கும் (வடக்கு மற்றும் தெற்கு) நாடுகள் அவற்றின் உண்மையான அளவை விடப் பெரியதாகக் காட்டப்படுவதாக புகார் இருந்து வந்தது.

உதாரணமாக, இந்த வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் இருப்பது போலத் தோன்றும். ஆனால், எதார்த்தத்தில் ஆப்பிரிக்கா கண்டமானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது. இத்தகைய குளறுபடிகளால் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா (இந்தியா உட்பட) ஆகிய பகுதிகளின் உண்மையான பரப்பளவு உலகிற்கு மிகச் சிறியதாகக் காட்டப்பட்டு, ஒரு சமநிலையற்ற உலகப் பார்வையை உருவாக்கியுள்ளதாக ஐநா கவலை தெரிவித்து வந்தது.

வாக்கெடுப்புக்குப் பிறகு ஐநா-விற்கான இந்திய பிரதிநிதி ராகு பூரி இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அப்போது அவர், சமூகங்கள் புவியியலையும், உலக நாடுகளின் பரஸ்பர அளவுகளையும் சரியாகப் புரிந்துகொள்வதில் உலக வரைபடங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, உலக நாடுகளின் நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகவும், நியாயமாகவும் பிரதிபலிக்கும் இந்த முயற்சியை இந்தியா வரவேற்கிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com